எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க அவசர சட்டம்; கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்


எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க அவசர சட்டம்; கர்நாடக மந்திரிசபை ஒப்புதல்
x

கர்நாடகத்தில் ஆதிதிராவிட-பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க கர்நாடக மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பெங்களூரு:

அவசர சட்டத்திற்கு ஒப்புதல்

கர்நாடகத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக அரசு கடந்த 7-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். இதில் ஆதிதிராவிட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின மக்களுக்கு 3-ல் இருந்து 7 ஆகவும் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் அதிகாரபூர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை 18-ல் இருந்து 24 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மந்திரிசபை கூட்டம்

கர்நாடகத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டு அளவை 18-ல் இருந்து 24 சதவீதமாக உயர்த்த ஏற்கனவே நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை செயல்படுத்தும் நோக்கத்தில் அவற்றுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கும் மசோதாவுக்கு இன்று (நேற்று) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை செயல்படுத்த மந்திரிசபையில் எடுக்கும் முடிவே போதுமானது என்று நாங்கள் முன்பு நினைத்தோம். ஆனால் அதனால் சட்ட சிக்கல்கள் எழும் என்பதால், அவசர சட்டத்தை பிறப்பிக்க முடிவு செய்தோம். அதன்படி மந்திரிசபை கூட்டத்தில் அவற்றுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம். இந்த சட்டத்தில், கர்நாடகத்தில் முன்பு ஆதிதிராவிட பட்டியலில் 6 சாதிகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது அதன் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளோம்.

மக்கள்தொகை

மக்கள்தொகை அதிகரித்துள்ளதால் இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே போல் பழங்குடியினர் பட்டியலில் நாயகாஸ், நாயக் போன்ற சாதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக மக்கள்தொகை அதிகரித்து இருப்பதால், இடஒதுக்கீட்டை 3-ல் இருந்து 7 ஆக உயர்த்தியுள்ளோம்.

இவ்வாறு மாதுசாமி கூறினார்.

இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்ககினால் அன்று முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் கர்நாடகத்தில் மொத்த இடஒதுக்கீடு 56 சதவீதமாக அதிகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீததத்தை தாண்டக்கூடாது. இந்த இடஒதுக்கீடு அதிகரிப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அதற்கு நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story