'கூச்சலிட்டு கதறி அழுத மாணவிகள்': பள்ளியில் நடந்த வினோத சம்பவம் - உத்தரகாண்டில் பரபரப்பு
உத்தரகாண்டில் பள்ளி மாணவிகள் கூச்சலிட்டு கதறி அழுத வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவிகள் திடீரென கூச்சலிட்டு, தரையில் உருண்டும், சத்தம் போட்டு அழுதும் விநோதமாக நடந்து கொண்டனர். இதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்தனர். மேலும் அருகில் உள்ள பாதிரியாரை அழைத்து வந்து மாணவிகளை சாந்தப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மாணவிகள் தொடர்ந்து கத்தி அழுதும், பள்ளி வளாகத்தில் அங்கும் இங்கும் உருண்டனர். அதனை தொடர்ந்து பள்ளியில் மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
பாகேஷ்வர் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் தங்களுடன் படித்த ஒரு தோழி மூழ்கிய சம்பவத்தில் இருந்து மாணவிகள் வெளியே வராமல் அதிர்ச்சியில் இருப்பதாகவும், இதனாலே இவ்வாறு செய்வதாகவும் மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்டில் பள்ளி மாணவிகள் கூச்சலிட்டு கதறி அழுத வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.