தேசதுரோக சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தேசதுரோக சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு, சர்ச்சைக்குரிய தேசதுரோக சட்டம் பற்றி மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதுவரை அந்த சட்ட நடைமுறை நிறுத்தி வைக்கப்படும் என்றும் கடந்த மே மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது.
சிறையில் இருப்பவர்களும் ஜாமீன் கோரி கோர்ட்டை நாடலாம் என்றும் அறிவித்து இருந்தது. அரசின் மறுஆய்வு நடைமுறை நிறைவடையும் வரை சட்டம் தற்காலிக ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட்டது.
அப்போது இந்திய தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா, நீதிபதிகள் சூரியகந்த் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிவு 124ஏ-ன் கீழ் எந்த வழக்குகளையும் பதிவு செய்ய வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டு கொண்டது.
அதுபோன்ற வழக்குகள் வருங்காலத்தில் பதிவு செய்யப்படும் என்றால், அது தொடர்புடையவர்கள் கோர்ட்டை சுதந்திரமுடன் நாடலாம். கோர்ட்டும் அதனை விரைவாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124ஏ ஆனது, தேசதுரோக குற்றம் சட்டவிரோதம் என தெரிவிக்கின்றது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ள தகவலின்படி, வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தேசதுரோக சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என தெரிவித்து உள்ளது.