கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்...! சித்தராமையா ஆதரவு மந்திரியால் வந்தவினை...!


கர்நாடக அரசியலில் மீண்டும் புயல்...! சித்தராமையா ஆதரவு மந்திரியால் வந்தவினை...!
x
தினத்தந்தி 23 May 2023 5:50 PM IST (Updated: 23 May 2023 5:55 PM IST)
t-max-icont-min-icon

டிகே சிவக்குமார் ஆட்சியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்து இருப்பதன் மூலம் அவர் தனது துணை முதல் மந்திரி பதவியையும் கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

பெங்களூரு

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியில் முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் தேர்வாகினர். இவர்கள் 2 பேரும் கடந்த 20ம் தேதி பதவியேற்று கொண்டனர். இவர்களுடன் 8 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தான் கர்நாடகா முதல் மந்திரி பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமை இருப்பார் என்றும் அடுத்து டிகே சிவகுமார் இருப்பார் என்றும்கூறப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.

இதற்கிடையே தான் சித்தராமையாவின் ஆதரவாளரும், மந்திரியுமான எம்.பி பாட்டீல், ''சித்தராமையா தான் 5 ஆண்டுகள் முதல் மந்திரியாக இருப்பார். முதல் இரண்டரை ஆண்டு ஒருவர், அடுத்த இரண்டரை ஆண்டு ஒருவர் முதல் மந்திரியாக இருப்பார் என எந்த ஒப்பந்தமும் இல்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் அதுபற்றி காங்கிரஸ் மேலிடம் கூறும் என கூறினார்.

இது காங்கிரஸ் கட்சியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மந்திரி எம்பி பாட்டீலின் இந்த பேச்சால் டிகே சிவக்குமார் மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக டிகே சிவக்குமார் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார்.

உடனடியாக அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதாவது, ''சித்தராமையா தான் 5 ஆண்டு முதல் மந்திரி என்று கூற எம்பி பாட்டீல் யாரு? அவர் என்ன மேலிட தலைவரா? இல்லை காங்கிரஸ் தலைவரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எம்,பி பாட்டீல் அப்படி கூறியுள்ளார்'' என கேள்விகள் எழுப்பி உள்ளார். மேலும், ''இனியும் இதுபோன்று அவர் பொதுவெளியில் கூறினால் மோசமான நிலை ஏற்படும். எப்படி அவர் இந்த கருத்தை கூறலாம்.

நான் எனது முடிவில் தெளிவாக இருக்கிறேன். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தான் முன்னுரிமை கொடுக்கிறேன். இதுபோன்ற பேச்சுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் காங்கிரஸ் அரசில் இருந்து விலகி இருக்கவும் தயாராக இருக்கிறேன்'' என கூறியதாக தகவல் தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிகே சிவக்குமார் ஆட்சியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்து இருப்பதன் மூலம் அவர் தனது துணை முதல் மந்திரி பதவியையும் கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

விதானசவுதாவில் எம்.பி பாட்டீலின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த டி.கே சிவக்குமார், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.அதைப் பற்றி நான் பேச மாட்டேன். அதிகாரம் மற்றும் பிற கட்சி பிரச்சனைகளை கவனிக்க காங்கிரஸ் மேலிடம் உள்ளது. காங்கிரசின் தேசிய தலைவர்கள் உள்ளனர். மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கு மட்டுமே எங்களது முன்னுரிமை என்றார்.

அதைப் பற்றி நான் பேச மாட்டேன். அதிகாரம் மற்றும் பிற கட்சி பிரச்னைகளை கவனிக்க ஏஐசிசி உள்ளது. காங்கிரசின் தேசிய தலைவர்கள் உள்ளனர். மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கு மட்டுமே எங்களது முன்னுரிமை என்றார்.

இதனால் கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தானில் முதல் மந்திரி பதவிக்காக அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அதேபோன்ற சூழல் கர்நாடகாவிலும் உருவாகிவிடுமோ என காங்கிரஸ் கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.


Next Story