மேற்கு வங்காள கவர்னர் மீது பாலியல் புகார்; மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அவரை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் மீது ராஜ்பவனில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆனந்த போஸ் கூறுகையில், "இதுபோன்ற சித்தரிக்கப்பட்ட கதைகளை வைத்து என்னை அச்சுறுத்த முடியாது. உண்மை வெல்லும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆனந்த போஸை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து புர்பா பர்தமான் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் கூறியதாவது;-
"ராஜ்பவனில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர் கவர்னரின் துன்புறுத்தலுக்கு எதிராக வெளியே வந்து பேசியுள்ளார். அந்தப் பெண்ணின் கண்ணீர் என் நெஞ்சைப் பிளந்தது.
ராஜ்பவனில் இனி வேலை செய்யவே பயமாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் வேலைக்கு அழைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நபர்கள்தான் நம் தாய், சகோதரிகளின் மானம் பற்றி பேசுகிறார்களா? நேற்று இரவு ராஜ்பவனுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்த விவகாரம் குறித்து பேசாதது ஏன்?"
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.