பாலியல் தொல்லை...!! பேராசிரியருக்கு எதிராக 500 கல்லூரி மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு; பிரதமருக்கு கடிதம்


பாலியல் தொல்லை...!! பேராசிரியருக்கு எதிராக 500 கல்லூரி மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டு; பிரதமருக்கு கடிதம்
x

இவ்விவகாரம் பற்றி துணைவேந்தரை மாணவிகள் அணுகியபோது, அவர்களை வெளியேற்றி விடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

புதுடெல்லி,

அரியானாவின் சிர்சா மாவட்டத்தில் சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் படித்து வரும் மாணவிகளில் 500-க்கும் மேற்பட்டோர் பேராசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

இதுபற்றி அந்த மாணவிகள் அனைவரும் பிரதமர் மோடி மற்றும் அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அவரை உடனடியாக சஸ்பெண்டு செய்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திட வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்துள்ளனர்.

அந்த கடிதத்தில், பேராசிரியரின் அருவருப்பான மற்றும் ஆபாச செயல்களை பற்றி குற்றச்சாட்டாக தெரிவித்து இருக்கின்றனர். அவர் கல்லூரி மாணவிகளை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, பின்னர் குளியலறைக்கு அழைத்து செல்வார் என்றும் அந்தரங்க பாகங்களை தொட்டு, தங்களிடம் ஆபாச செயல்களில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளிடம், மிக மோசம் வாய்ந்த விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறுவார். பல மாதங்களாக இது தொடர்ந்துள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவர் உயரிய பண்புடையவர் என்ற செல்வாக்கை பெற்றவராதலால், அவருக்கு எதிராக ஒருவரும் கையை உயர்த்தி பேச முன்வரவில்லை. இதுநாள் வரையில் இதற்காக அவர் பொறுப்பாக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

இவ்விவகாரம் பற்றி துணைவேந்தரை மாணவிகள் அணுகியபோது, அவர்களை வெளியேற்றி விடுவேன் என மிரட்டியிருக்கிறார். ஏனெனில், அந்த பேராசிரியர் அரசியல் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்து வந்திருக்கிறார்.

இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க, எழுத்து மற்றும் செய்முறை தேர்வுகளில் மாணவிகளுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கவும் அந்த துணைவேந்தர் முன்வந்த தகவல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கடிதத்தின் நகலை, பல்கலைக்கழக துணைவேந்தரான டாக்டர் அஜ்மீர் சிங் மாலிக், அரியானாவின் உள்துறை மந்திரி அனில் விஜ், அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா ஆகியோருக்கும் அனுப்பி உள்ளனர். குறிப்பிட்ட ஊடகங்கள் மற்றும் மூத்த மாநில அரசு அதிகாரிகளுக்கும் நகல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


Next Story