டெல்லியில் கல்லூரி விழாக்களில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மகளிர் ஆணையம் விசாரணை


டெல்லியில் கல்லூரி விழாக்களில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு மகளிர் ஆணையம் விசாரணை
x

டெல்லியில் கல்லூரி விழாக்களின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறித்து மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

புதுடெல்லி,

டெல்லியில் கல்லூரி விழாக்களின்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறித்து மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

டெல்லி இந்திரபிரஸ்தா பெண்கள் கல்லூரியில் கடந்த மாதம் 28-ந் தேதி நடைபெற்ற கல்லூரி விழாவின்போது சுவரேறி குதித்து உள்ளே நுழைந்த சிலர், மாணவிகளிடம் அத்துமீறி நடந்ததாக அக்கல்லூரி மாணவிகள் குற்றம் சாட்டினர். அதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 7 பேரை கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள கார்கி, மிராண்டா கல்லூரி விழாக்களின்போதும் இதுபோன்ற பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடந்திருப்பதாக கடந்த காலங்களில் புகார் கூறப்பட்டிருக்கிறது.

அதையடுத்து இந்த சம்பவங்கள் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு வலுவான அமைப்பை உருவாக்கும் வகையில் இந்த விசாரணை நடத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு டெல்லி போலீஸ் மற்றும் இந்திரபிரஸ்தா கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி பல்கலைக்கழக பதிவாளர், டெல்லி போலீஸ் இணை கமிஷனர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு போலீஸ் பிரிவு ஆகியோர் இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கை அளிக்கும்படி மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள், தேவையான தகவல்களுடன் வருகிற 6-ந் தேதி ஆணையத்தின் முன் ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story