ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; ரஷிய வெளியுறவு மந்திரி கோவா வருகை


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; ரஷிய வெளியுறவு மந்திரி கோவா வருகை
x
தினத்தந்தி 4 May 2023 5:22 AM GMT (Updated: 5 May 2023 12:16 PM GMT)

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை, ரஷிய வெளியுறவு மந்திரி இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பனாஜி,

கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதற்காக ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் லவ்ரவ் இன்று காலை கோவாவின் தபோலிம் விமான நிலையத்திற்கு வருகை தந்து உள்ளார்.

அவருடன் அந்நாட்டை சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும் வந்து உள்ளனர். இதன்பின்னர், இன்று நடைபெறும் இருதரப்பு சந்திப்பில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கரை அவர்கள் இன்று சந்தித்து பேச உள்ளனர்.

இந்த சந்திப்பில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மண்டல பாதுகாப்பு போன்ற முக்கியம் வாய்ந்த புவிஅரசியல் விவகாரங்கள் பற்றி மந்திரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த மார்ச் மாதத்தில் புதுடெல்லியில் நடந்த ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் லவ்ரவ் கலந்து கொண்டார். அவர் நடப்பு ஆண்டில் 2-வது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இந்த கூட்டத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.


Next Story