நிலைமை சீராகும் வரை பண்டிட் ஊழியர்களை ஜம்முவுக்கு இடமாற்றுங்கள் - குலாம் நபி ஆசாத்
எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டிட் ஊழியர்களை தற்காலிகமாக ஜம்முவுக்கு இடமாற்றம் செய்வோம் என்று ஆசாத் கூறினார்.
ஸ்ரீநகர்,
பிரதமரின் சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் பண்டிட்கள் காஷ்மீரில் அரசுப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. குறிப்பாக, அரசுப்பணியில் உள்ள பண்டிட்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் பல பண்டிட்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து தங்கள் உயிருக்கு அஞ்சி, பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தும்படி கடந்த 7 மாதங்களாக காஷ்மீரில் உள்ள பண்டிட்கள் தங்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது, பணிக்கு செல்லவில்லை என்றால் காஷ்மீரில் உள்ள பண்டிட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று கவர்னர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், காஷ்மீரில் நிலைமை சீராகும் வரை பண்டிட் ஊழியர்களை தற்காலிகமாக ஜம்முவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனநாயக அசாத் கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், துரதிஷ்டவசமாக சில சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. உயிர் முக்கியம் என்பதால் பண்டிட் ஊழியர்கள் ஜம்முவில் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். காஷ்மீரில் நிலைமை சீரடைந்த உடன் பண்டிட்களை காஷ்மீருக்கு திரும்ப அழைக்க வேண்டும். அரசு பின்பற்றும் முறை என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்டிட் ஊழியர்களை தற்காலிகமாக ஜம்முவுக்கு மாற்றுவோம்' என்றார்.