செந்தில் பாலாஜி தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு - நாளை விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நாளை விசாரிக்கிறது.
புதுடெல்லி,
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 15-ந் தேதி விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியை பரிசோதித்து இரு மருத்துவக் குழுவினர் அளித்த அறிக்கையை சந்தேகிக்க முடியாது எனக் கூறி, அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தள்ளிவைப்பு
அவர் தொடர்ந்து கோர்ட்டு காவலில் இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை தமது மருத்துவக் குழுவினரை கொண்டு பரிசோதனை செய்யவும் அனுமதி அளித்தது.
மேலும் செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
சிகிச்சையில் இருக்கும் நாட்களை அமலாக்கப்பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோரும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கை ஜூன் 22-ந் தேதி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
மிகவும் செல்வாக்கு படைத்த அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு முன் முறையிட்டார்.
நாளை விசாரணை
முறையீட்டை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு புதன்கிழமை (நாளை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.