நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு - இன்று மாலை விசாரணை


நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு - இன்று மாலை விசாரணை
x
தினத்தந்தி 29 Jun 2022 5:41 AM GMT (Updated: 2022-06-29T11:14:16+05:30)

சிவசேனா அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென மராட்டிய கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால், மராட்டியத்தில் உத்தவ் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனிடையே, மராட்டிய அரசு நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.

உத்தவ் தாக்கரேக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 48 எம்.எல்.ஏ.க்கள் களமிறங்கியுள்ளதால் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்பட்சத்தில் மராட்டிய சிவசேனா அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நாளை மாலை 5 மணிக்குள் நிரூபிக்க வேண்டுமென கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

சிவசேனா கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்துள்ள இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மாலை விசாரணைக்கு வர உள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு, அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு என அடுத்தடுத்த நிகழ்வுகள் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க... தப்புமா சிவசேனா அரசு? - பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவு


Next Story