நாங்கள் தற்போது மும்பை திரும்புவது பாதுகாப்பாக இருக்காது; சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ பேட்டி


நாங்கள் தற்போது மும்பை திரும்புவது பாதுகாப்பாக இருக்காது; சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ பேட்டி
x

தற்போது மும்பை திரும்புவது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்று சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ., தங்களது அணியின் பெயர் சிவசேனா (பாலாசாகேப்) என்று கூறினார்.

சிவசேனாவில் உள்ளோம்

மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார். இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாமில் உள்ள தீபக் கேசர்கர் எம்.எல்.ஏ. காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், " தேர்தலில் எந்த கட்சி சார்பில் போட்டியிட்டோமோ அதே கட்சியில் தான் தான் இருப்போம் என எம்.எல்.ஏ.க்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் கூறினர். பலர் இதே கருத்தை கூறும் போது கண்டிப்பாக அதில் உண்மை இருக்கும் " என்றார்.

அப்போது அவரிடம் ஏக்நாத் ஷிண்டே குழு மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே அரசுக்கு அளிக்கும் ஆதரவை விலக்கி கொள்ளுமா என கேட்டதற்கு, " நாங்கள் ஏன் ஆதரவை திரும்ப பெற வேண்டும்?. நாங்கள் சிவசேனாவில் தான் உள்ளோம். நாங்கள் கட்சியை அபகரிக்கவில்லை. காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தான் சிவசேனாவை அபகரிக்கிறது " என்றார்.

மேலும் அவர் கூறும்போது:-

மும்பை திரும்புவது...

ஏக்நாத் ஷிண்டே குழு சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்கும். நாங்கள் எந்த கட்சியுடனும் சேர மாட்டோம். எங்கள் குழுவுக்கு சிவசேனா (பாலாசாகேப்) என பெயர் வைக்க முடிவு செய்து உள்ளோம். ஏனெனில் நாங்கள் அவரது சித்தாந்தத்தை நம்புகிறோம். உத்தவ் தாக்கரே பால் தாக்கரே பெயரை மற்றவர் பயன்படுத்த கூடாது என கூறியது குறித்து பரிசீலிப்போம். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பை திரும்ப சிறிது காலம் எடுக்கும். தற்போது எங்களுக்கு அழுத்தம் உள்ளது. தற்போது மும்பை வருவது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. அதிருப்தியாளர்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story