சிவசேனா கட்சி கூட்டம் புறக்கணிப்பு; எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி துணை சபாநாயகருக்கு கடிதம்


சிவசேனா கட்சி கூட்டம் புறக்கணிப்பு; எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி துணை சபாநாயகருக்கு கடிதம்
x

சிவசேனா கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி துணை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.



புனே,



மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. எனினும், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் பூசல் எழுந்தபடியே இருந்தது.

கூட்டணியில் இருந்து கொண்டே சிவசேனாவுக்கு எதிரான வேலையில் கூட்டணியினர் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சிவசேனா அவ்வப்போது வெளிப்படுத்தி, அதிருப்தியும் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியை, தேசியவாத காங்கிரஸ் முதுகில் குத்துகிறது என காங்கிரசின் நானா பட்டோலே கடந்த மே மாதம் குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மேல்சபைக்கான தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதில், கட்சி மாறி ஓட்டு போட்டது இதற்கு காரணம் என்ற சந்தேகம் நிலவியது.

அதற்கேற்ப, சிவசேனா தலைவர்களில் ஒருவரான மற்றும் மராட்டிய அமைச்சரவையில் மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டேவை கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடன் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சென்று விட்டனர்.

இந்த சர்ச்சையால் கடந்த 2 நாட்களாக மராட்டிய அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டசபை கட்சி தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா நீக்கியது.

அசாமின் கவுகாத்தி நகரில் உள்ள ரேடிசன் புளூ ஓட்டலில் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக தங்கி உள்ளனர். மராட்டியத்தில் ஆளும் சிவசேனாவின் 35 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் என மொத்தம் 42 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒன்றாக உள்ள குழு புகைப்படமும் இன்று வெளியானது.

கட்சியின் நன்மைக்காக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என ஷிண்டே கூறியுள்ளார். மராட்டிய அரசில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால், அதற்கு நாங்கள் (சிவசேனா) தயாராக இருக்கிறோம். ஆனால், 24 மணிநேரத்தில் அவர்கள் மும்பை வரவேண்டும். முதல்-மந்திரியிடம் அதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என சஞ்சய் ராவத் கூறினார்.

மராட்டியத்தில் ஏற்பட்டு உள்ள அரசியல் நெருக்கடியான சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒய்.பி. சவான் மையத்தில் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தொடரும் என சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

ஆனால், இந்த வரலாற்று முடிவை எடுத்ததற்கு பெரிய தேசிய கட்சி ஒன்று தன்னை பாராட்டியது என ஷிண்டே ஓட்டல் ஒன்றில் சக எம்.எல்.ஏ.க்களிடம் கூறுகிற வீடியோ வெளிவந்து உள்ளது.

இந்த சூழலில், கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி துணை சபாநாயகருக்கு சிவசேனா கடிதம் எழுதியுள்ளது. எதிரணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும்படியும் சிவசேனா கடிதத்தில் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், கூடுதலாக 2 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே அணியில் சேர்ந்து உள்ளனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை நீட்டித்து உள்ள நிலையில், ஷிண்டேவின் அடுத்த கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.


Next Story