பொது சிவில் சட்டத்திற்கு சிவசேனா ஆதரவு- நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த கோரிக்கை
பொது சிவில் சட்டம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதம் நடத்த வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.
மும்பை
மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு உள்ள பொது சிவில் சட்டத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் எம்.பி. ராகுல் செவாலே கூறியதாவது:- பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக வருகிற மழைக்கால கூட்டத்தொடரில் மராட்டிய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயை கேட்டுகொள்கிறோம். மேலும் பொது சிவில் சட்டத்தில் மராட்டியத்தின் நிலைப்பாட்டை கூறும் வகையில் சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பொது சிவில் சட்டம் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் 3 கனவுகளில் ஒன்றாகும். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும், நாட்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது பால்தாக்கரேவின் கனவு. இதில் 2-ஐ மோடி நிறைவேற்றிவிட்டார். 3-வது கனவும் விரைவில் நிறைவேறும். எல்லா மக்களின் நலனுக்காகவும் பால் தாக்கரே பொது சிவில் சட்டத்தை ஆதரித்தார். குறிப்பாக பெண்கள் சமமாக நடத்தப்படுவார்கள்" என்றார்.