13 மந்திரிகள் அதிர்ச்சி தோல்வி


13 மந்திரிகள் அதிர்ச்சி தோல்வி
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை சேர்ந்த 13 மந்திரிகள் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். அதுபோல் ஜெகதீஷ் ஷெட்டரின் வெற்றியும் பறிபோனது.

பெங்களூரு, மே.14-

13 மந்திரிகள் தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா 65 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் முக்கியமான 11 மந்திரிகள் மற்றும் சபாநாயகர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.

அதாவது இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் (முத்தோல்), சட்டத்துறை மந்திரி மாதுசாமி (சிக்கநாயக்கனஹள்ளி), தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி (பீலகி), நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), வீட்டு வசதி மந்திரி சோமண்ணா (சாம்ராஜ்நகர் மற்றும் வருணா), சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் (ஹிரேகெரூர்), போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு (பல்லாரி புறநகர்), பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் (திப்தூர்), சர்க்கரை மந்திரி சங்கர் பட்டீல் (நவலகுந்து), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் (எலபுர்கா), வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் (கனகபுரா) என மொத்தம் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்துள்ளனர்.

இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மந்திரி ஆர்.அசோக் பத்மநாபநகரில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.முக்கியமாக சட்டசபை சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்ட காகேரி சிர்சி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

பா.ஜனதா அதிர்ச்சி

இந்த தேர்தலில் முக்கியமான 13 மந்திரிகள் தோல்வி அடைந்திருப்பது பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை போக்கவே பா.ஜனதா 75 முகங்களுக்கு டிக்கெட் வழங்கியது. இதன் மூலம் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சி கருதியது.

ஆனால் அதையும் தாண்டி ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையால் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பா.ஜனதாவின் கோட்டையாக கருதப்படும் சிக்கமகளூருவில் 5 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது.

ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வி

மேலும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார். அதுபோல் பா.ஜனதாவில் இருந்து விலகி அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.


Next Story