ஷ்ரத்தா, நிக்கி, மேகா... தொடரும் சம்பவம்; ஐதராபாத்தில் லிவ்-இன் காதலி கொடூர கொலை


ஷ்ரத்தா, நிக்கி, மேகா... தொடரும் சம்பவம்; ஐதராபாத்தில் லிவ்-இன் காதலி கொடூர கொலை
x

டெல்லி ஷ்ரத்தா வாக்கர் சம்பவம் போல் ஐதராபாத்தில் லிவ்-இன் காதலியை கொடூர கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் பி. சந்திர மோகன் (வயது 48). இவர் ஒய். அனுராதா ரெட்டி (வயது 55) என்பவருடன் லிவ்-இன் முறையில் தொடர்பில் இருந்து வந்து உள்ளார்.

அவரை தனது வீட்டின் ஒரு பகுதியில் தரை தளத்திலேயே தங்க வைத்து உள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பெற்று உள்ளார்.

அதனை திருப்பி தர கோரி, அவரும் சந்திரமோகனிடம் தொடர்ந்து கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளார். இதனால், அவரை தீர்த்து கட்ட மோகன் திட்டமிட்டு உள்ளார். இதன்படி, கடந்த 12-ந்தேதி மதியம் அவரிடம் மோகன் சண்டை போட்டு உள்ளார்.

அதன்பின், நெஞ்சு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்து உள்ளார். இதன்பின்னர், உடலின் பாகங்களை பல துண்டுகளாக ஆக்கியுள்ளார். அவற்றை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்து உள்ளார்.

பினாயில், டெட்டால், வாசனை பத்தி, கற்பூரம் மற்றும் வாசனை திரவியம் ஆகியவற்றை வாங்கி உடலில் தெளித்து வந்து உள்ளார். அந்த பெண்ணின் மொபைல் போனில் இருந்து தெரிந்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ். செய்து, சந்தேகம் எழாமல் பார்த்து கொண்டார்.

இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்பவர் தனது காதலரான அப்தாப் அமீன் பூனாவல்லா என்பவரால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

அரியானாவில் நிக்கி யாதவ் என்ற 25 வயது இளம்பெண் அவரது காதலரால், திருமணத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு பிரீசரில் அவரது உடல் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிப்ரவரி 9-ந்தேதி இரவில் நடந்த இந்த வழக்கில் காதலர் சாஹில் கெலாட், அவரின் தந்தை, உறவினர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது நடந்த சில நாட்களில் பிப்ரவரி 12-ந்தேதி மராட்டியத்தில் பால்கர் நகரில் மேகா தோர்வி (வயது 37) என்பவர் லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலர் ஹர்திக் ஷா என்பவரால் கொலை செய்யப்பட்டார்.


Next Story