ஆடு மேய்த்து கொண்டிருந்த நான் அரசியல் சாசனத்தால் முதல்-மந்திரி ஆனேன்; சித்தராமையா பரபரப்பு பேச்சு


ஆடு மேய்த்து கொண்டிருந்த நான் அரசியல் சாசனத்தால் முதல்-மந்திரி ஆனேன்; சித்தராமையா பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 26 Jun 2023 9:20 PM GMT (Updated: 27 Jun 2023 9:48 AM GMT)

ஆடு மேய்த்து கொண்டிருந்த நான், அரசியல் சாசனத்தால் தான் முதல்-மந்திரி ஆனேன் என்று புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி முகாமில் சித்தராமையா கூறினார்.

பெங்களூரு:

ஆடு மேய்த்து கொண்டிருந்த நான், அரசியல் சாசனத்தால் தான் முதல்-மந்திரி ஆனேன் என்று புதிய எம்.எல்.ஏ.க்களுக்கான 3 நாள் பயிற்சி முகாமில் சித்தராமையா கூறினார்.

புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பயிற்சி முகாம்

கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் புதிதாக 224 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் 135 இடங்களில் வெற்றி பெற்றதால், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இந்த எம்.எல்.ஏ.க்களில் 70 பேர் முதல் முறையாக கர்நாடக சட்டசபைக்கு தேர்வாகி உள்ளனர்.

அந்த 70 எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டசபை விதிகள் மற்றும் நிகழ்வுகள், சட்டசபையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் பற்றியும் கற்பிக்கும் வகையில் 3 நாட்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா பெங்களூரு அருகே நெலமங்களாவில் நேற்று நடைபெற்றது.

அரசியல் சாசனம் அவசியமானது

இதில் முதல்-மந்திரி சித்தராமையா, சட்டசபை சபாநாயகர் யு.டி.காதர், மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி முகாமை தொடங்கிவைத்தனர்.

அதன் பிறகு சித்தராமையா பேசியதாவது:-

அரசியல் சாசனத்தை படித்து புரிந்து கொள்ளாத எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ நல்ல மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது. அதனால் நீங்கள் முதலில் அரசியல் சாசனத்தை படித்து அதன் கொள்கைகள், தத்துவங்கள், நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். சட்டசபை விதிகளை நாமே வகுத்துள்ளோம். அதை நீங்கள் சரியான முறையில் படித்து பார்த்து புரிந்து கொண்டால், மக்களின் பிரச்சினைகளை சபையில் எடுத்து வைக்கலாம். அதனால் அரசியல் சாசனத்தை வாசிப்பது அவசியமானது.

அரசியல் சாசனத்தை பின்பற்றாவிட்டால் ஹிட்லரை போல் நமது நாட்டில் சர்வாதிகாரம் வந்துவிடும். ஹிட்லர், யகுடி இனத்தை சேர்ந்த 58 லட்சம் பேர் உள்பட 2 கோடி மக்களை கொன்று குவித்தார். அதில் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் 1½ கோடி பேர் அடங்குவர். தான் சொல்வதே சட்டம் என்று அவர் நடந்து கொண்டார்.

பகிர்ந்து அளிக்கிறோம்

பட்ஜெட் என்றால் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 12-ம் நூற்றாண்டில் பசவண்ணர் பட்ஜெட் குறித்து கூறியுள்ளார். தொழில், பகிர்ந்து அளித்தல் ஆகியவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் ஆகும். தொழில் என்றால் உற்பத்தி. இது தான் பட்ஜெட். உற்பத்தி எங்கிருந்து வருகிறது, அதை எப்படி அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்து அளிக்கிறோம் என்பதே பட்ஜெட் ஆகும். நான் நிதித்துறை மந்திரியாக இருந்தபோது முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய தயாரானேன். அப்போது சிலர், என்னை பார்த்து 100 ஆடுகளை எண்ண தெரியாதவர், எப்படி தாக்கல் செய்வார் என்று கேலி செய்தனர்.

இதை நான் சவாலாக எடுத்துக் கொண்டு நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தேன். எனது பட்ஜெட் குறித்து ஒரு பிரபலமான ஆங்கில நாளிதழ், இது சிறப்பான பட்ஜெட் என்று வர்ணித்தது. அதனால் நீங்கள் அறிவாற்றல் மற்றும் ஆய்வு செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். என்னை போன்றவர்கள் முதல்-மந்திரி ஆகவும், எம்.எல்.ஏ. ஆகவும் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் தான் காரணம்.

வாட்டாள் நாகராஜ்

அரசியல் சாசனம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான், சி.டி.ரவி, ஈசுவரப்பா உள்ளிட்டோர் இன்று ஆடு-மாடுகளை மேய்த்து கொண்டு இருந்திருப்போம். அரசியல் சாசனம் இருப்பதால் தான் நான் முதல்-மந்திரி ஆகியுள்ளேன். அதனால் நீங்கள் அரசியல் சாசனத்தின் மாண்புகளை அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். வாட்டாள் நாகராஜ், ஒரு முன்மாதிரி எம்.எல்.ஏ.வாக இருந்தார். சட்டசபை கூடுவதற்கான மணி அடிக்கும்போதே அவர் தனது இருக்கையில் வந்து அமர்ந்திருப்பார். கூட்டம் முடிவடையும் வரை எங்கும் செல்ல மாட்டார். இதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

கர்நாடக சட்டசபைக்கு முதல் முறையாக 70 எம்.எல்.ஏ.க்கள் வந்துள்ளனர். அதில் முக்கியமாக முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய உணவுத்துறை மந்திரியுமான கே.எச்.முனியப்பா, முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி ஆகியோரும் அடங்குவர். நமது மாநிலத்தின் முதல் பட்ஜெட் அளவு ரூ.21 கோடியே 3 லட்சம் ஆகும். தற்போது நமது பட்ஜெட் ரூ.3 லட்சத்து 9 ஆயிரம் கோடியாக உள்ளது.

5 உத்தரவாத திட்டங்கள்

ஏழை, நடுத்தர மக்களின் மேம்பாட்டிற்காக 5 உத்தரவாத திட்டங்களை நாங்கள் அமல்படுத்துகிறோம். இதற்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. வியா்வை, உழைப்புக்கு மக்கள் உரிய மரியாதை கொடுப்பார்கள். மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, விஷயங்களை ஆழ்ந்து ஆராய்ந்து தகவல்களை சேகரிப்பது போன்ற விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் ஏதோ அதிர்ஷ்டத்தால் ஒரு முறை மட்டுமே வெற்றி பெறலாம். வெறும் பணம் மற்றும் ஆணவத்தால் அரசியல் செய்ய முடியாது. ஒரு முறையாவது சட்டசபைக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று பலருக்கு ஏக்கம் உள்ளது. ஆனால் வெற்றி பெற்ற பிறகு சட்டசபை கூட்டத்தில் சரியாக கலந்து கொள்வது இல்லை. இது தவறு. சட்டசபையில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை கற்று அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். சட்டசபை ஜனநாயகத்தின் கோவில். இங்கு மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி அவற்றுக்கு தீர்வு பெறும் மனநிலையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

நாளை நிறைவு

நேற்று தொடங்கிய இந்த பயிற்சி முகாம் நாளை (புதன்கிழமை) நிறைவடைகிறது. இதில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், மத குருக்கள், மூத்த எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மாண்புகள் குறித்தும், அவையில் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்து பேச உள்ளனர்.


Next Story