ஊழல் தடுப்பு படையை உருவாக்கியது ஏன்?; சட்டசபையில் சித்தராமையா விளக்கம்
தான் முதல்-மந்திரியாக இருந்தபோது ஊழல் தடுப்பு படையை உருவாக்கியது ஏன்? என்று சட்டசபையில் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு:
தான் முதல்-மந்திரியாக இருந்தபோது ஊழல் தடுப்பு படையை உருவாக்கியது ஏன்? என்று சட்டசபையில் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-
கர்நாடக அரசின் வருவாய்
பட்ஜெட் என்றால் கர்நாடக அரசின் வருவாய் எவ்வளவு, மத்திய அரசிடம் இருந்து நமக்கு வர வேண்டிய வரி பங்கு எவ்வளவு, மத்திய அரசு கர்நாடகத்திற்கு எவ்வளவு நிதி உதவி செய்கிறது என்பது போன்ற முக்கியமான புள்ளி விவரங்கள் இருக்க வேண்டும். கர்நாடகத்தின் பட்ஜெட் அளவு முன்பு ரூ.2.60 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட் அளவு தற்போது 26 சதவீதம் அதிகரித்து உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். சுங்கவரி, முத்திரைத்தாள் வரி வருவாய் போன்றவை அதிகரித்து உள்ளதாக முதல் மந்திரி கூறியுள்ளார்.
நிதி பற்றாக்குறையை ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நிதி பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்வதாகவும் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு இந்த பா.ஜனதா அரசு இருக்காது. இதுதான் இந்த அரசின் கடைசி பட்ஜெட். நடப்பு ஆண்டில் நிதி பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை இந்த அரசால் தாக்கல் செய்ய முடியவில்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 5 ஆண்டுகளும் உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்தேன்.
30 திட்டங்கள்
இந்த பட்ஜெட்டில் எங்கும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் அம்சங்கள் இடம் பெறவில்லை. நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றினோம்.
அது மட்டும் இன்றி சொல்லாத விஷயங்களையும் அதாவது 30 புதிய திட்டங்களையும் அமல்படுத்தினேன். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது முந்தைய சித்தராமையா ஆட்சியில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 30 சதவீதத்தை நிறைவேற்றவில்லை என்று தவறான தகவலை கூறியுள்ளார். பகிரங்க விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். மக்களுக்கு தவறான தகவல்களை கூறக்கூடாது.
ஊழல் தடுப்பு படை
நான் முதல்-மந்திரியாக இருந்தபோது போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை, ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவி தற்கொலை உள்பட 8 வழக்குகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதுகுறித்து சி.பி.ஐ. தனது அறிக்கையை தாக்கல் செய்தது. லோக்அயுக்தா அதிகாரத்தை குறைத்து ஊழல் தடுப்பு படையை அமைத்தது ஏன் என்று பா.ஜனதா கட்சியினர் கேள்வி எழுப்புகிறார்கள். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது லோக்அயுக்தா நீதிபதியாக பாஸ்கர் ராவ் என்பவர் பணியாற்றினார். அவரது மகன் அரசு பங்களாவில் இருந்து கொண்டு ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தது. அதனால் ஊழல் தடுப்பு படை உருவாக்கினேன்.
குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேவம், அரியானா, கோவாவில் ஊழல் தடுப்பு படை உள்ளது. அந்த மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் லோக்பால் அமைப்பை உருவாக்குவதாக பா.ஜனதா கூறியது. ஆனால் இதுவரை அந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. கர்நாடக ஐகோர்ட்டு தான் ஊழல் தடுப்பு படையை ரத்து செய்தது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.