ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு கூறினர் - மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மீதான 9 மணி நேரம் விசாரணை நிறைவடைந்தது.
புதுடெல்லி,
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து விளக்கம் அளித்த துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த சூழலில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பினர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மணீஷ் சிசோடியா, "இன்று சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்தேன். கலால் ஊழல் தொடர்பான எந்த பிரச்சினை இல்லை. முழு வழக்கும் போலியானது. இன்றைய 9 மணி நேர விசாரணையில் அனைத்தையும் புரிந்து கொண்டேன். இந்த வழக்கு என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக அல்ல. ஆனால் டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இந்த விசாரணை. ஆம் ஆத்மியை விட்டு பாஜகவுக்கு வரமாட்டேன் என்றேன். என்னை முதல்வராக்குவோம் என்று சொன்னார்கள்" என்று அவர் தெரிவித்தார்.