மணிப்பூர் நிலவரம்; முதல்-மந்திரியுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை
மணிப்பூர் நிலவரம் பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்குடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கி, தீ வைத்து கொளுத்தினர்.
இந்த கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.
வன்முறை பகுதியில் இருந்து, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இணைய தள சேவை துண்டிக்கப்பட்ட நிலையில், மணிப்பூரில் நீட் தேர்வை தள்ளி வைத்து, தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.
இதன்பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்டது. இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதுபற்றி, மணிப்பூர் முதல்-மந்திரி செய்தியாளர்களிடம் கூறும்போது, மணிப்பூரில் வன்முறைக்கு அப்பாவி பொதுமக்கள் 60 பேர் பலியாகி உள்ளனர். 231 பேர் காயமடைந்து உள்ளனர்.
1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் அமைதியை கொண்டு வரும்படி மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். வன்முறையின்போது, பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்ட மக்கள், அவர்களுடைய சொந்த இடங்களுக்கு திருப்பி கொண்டு செல்லப்படும் பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
சம்பவம் நடந்த நாள் முதல் நிலைமை பற்றி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கண்காணித்து வருகிறார். அவர் பல மத்திய படை கம்பெனிகளை அனுப்பி உள்ளார் என்றும் கூறினார். மணிப்பூரில் நிலவரம் பற்றி அறிவதற்காக, டெல்லியில் மணிப்பூர் முதல்-மந்திரி, அமைச்சரவை சகாக்கள் 4 பேர் மற்றும் ராஜ்யசபை எம்.பி. ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் பற்றி இன்றும் டெல்லியில் ஆலோசனை நடந்தது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் மற்றும் மெய்தய், குகி சமூக பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் ஆகியோருடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை பற்றி சீராய்வு கூட்டம் நடத்தியுள்ளார் என தெரிவித்து உள்ளது.