ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்பு


தினத்தந்தி 6 Oct 2022 5:12 AM GMT (Updated: 6 Oct 2022 5:20 AM GMT)

விஜயதசமியையொட்டி 2 நாள் ஓய்வெடுத்த ராகுல்காந்தி, தனது 5-வது நாள் பயணத்தை தொடங்கினார்.

பெங்களூரு,

இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளாவை நிறைவு செய்து விட்டது. தற்போது கர்நாடகத்தில் பாதயாத்திரை நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

இந்த சூழலில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து ராகுல்காந்தி இன்று தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் எதிலும் சோனியா காந்தி கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மிகப்பெரிய ஒரு பொது நிகழ்ச்சியாக இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story