கர்நாடகத்தில் நடைபெறும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்கிறார்கள்; டி.கே.சிவக்குமார் பேட்டி


கர்நாடகத்தில் நடைபெறும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்கிறார்கள்; டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நடைபெறும் ராகுல்காந்தி பாதயாத்திரையில் சோனியா, பிரியங்கா பங்கேற்கிறார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு:

தேதி முடிவாகவில்லை

ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகிறது. இதுகுறித்த காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவா் சித்தராமையா உள்பட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பாரத்ஜோடோ பாதயாத்திரை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத்ஜோடோ பாதயாத்திரை வருகிற 30-ந் தேதிக்குள் கர்நாடகத்திற்குள் வருகிறது. கர்நாடகத்தில் நடைபெறும் இந்த பாதயாத்திரையின்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் கலந்து கொள்ளும் தேதி இன்னும் முடிவாகவில்லை. வரும் நாட்களில் அவர்கள் கலந்து கொள்ளும் தேதியை அறிவிப்பேன்.

தசரா பண்டிகை

காந்தி பிறந்த தினமான வருகிற 2-ந் தேதி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் விழா நடக்கிறது. அந்த கிராமம் காதி பொருட்கள் உற்பத்திக்கு பிரபலமானது. தசரா பண்டிகையையொட்டி பாதயாத்திரை 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது. ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், பழங்குடியினத்தினருடன் கலந்துரையாடுகிறார். இவற்றை ஒருங்கிணைக்க தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்லாரியில் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அகில இந்திய காங்கிரஸ் தலைவரை நியமிக்கும் விஷயத்தில் நாங்கள் ஏற்கனவே கட்சி தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ளோம். ராகுல் காந்தி தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்த விஷயத்தில் அவரே முடிவு எடுப்பார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story