ஒலி பெருக்கி:-பா.ஜனதா ஆட்சியை இழக்கும் என பிரதமர் மோடிக்கு தெரியும்
கர்நாடகவுக்கு பிரதமர் மோடி பங்களிப்பு என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். கர்நாடக மக்கள் அறிவொளி பெற்றுள்ளனர். அவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. சட்டசபை தேர்தலில் சரியான முடிவெடுக்கும் அரசியல் முதிர்ச்சி அவர்களிடம் உள்ளது. கர்நாடகத்தில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடக்கவில்லை. இருப்பினும் பிரதமர் மோடி கர்நாடகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்து ஆட்சியை இழக்கும். இது பிரதமர் மோடிக்கு தெரியும்.
- எச்.டி.தேவேகவுடா, முன்னாள் பிரதமர்
நானும் எனது தந்தை, தாத்தாவும் இந்து தான்
நான், என் தந்தை, என் தாத்தா, அவருடைய தாத்தா என அனைவரும் இந்துதான். நான் மகாத்மா காந்தி, விவேகானந்தர் கூறிய இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவன். சாதி, மதப்பிரச்சினையை ஏற்படுத்துவதே பா.ஜனதாவின் வேலை. பா.ஜனதாவின் இந்துத்துவா கொள்கையை எதிர்கிறோம். எங்களுக்கு ஓட்டுப்போட வில்லை என்றால் பிரதமர் மோடியின் ஆசிர்வாதம் கிடைக்காது என பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். கர்நாடக மக்கள் யாருடைய ஆசியும் பெற விரும்பவில்லை. இங்குள்ள மக்கள் தங்கள் வலிமையிலும், விடா முயற்சியிலும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
- சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர்.
அனுமான் வாலில் வைத்த தீ காங்கிரசை எரித்துவிடும்
பஜ்ரங்தளத்திற்கு தடை விதிக்கப்படும் என்று கூறி அனுமானின் வாலில் காங்கிரஸ் கட்சி தீவைத்துள்ளது. அந்த கட்சியை அந்த தீ எரித்துவிடும் லவ் ஜிகாத்துக்கு எதிராக பஜ்ரங்தளம் போராடி வருகிறது. இ்ந்தியாவை உலக நாடுகளுக்கு இணையாக பிரதமர் மோடி வளர்ச்சி பெற வைத்துள்ளார். ராகுல்காந்தி ஜாமீனுக்காக ஓடி வருகிறார். காங்கிரசார் பொய்களை கூறிக்கொண்டு அரிச்சந்திரன் போல் பேசுகிறார்கள். பிரதமர் மோடி எதிரி என யாரும் கிடையாது
- ஆர்.அசோக், பா.ஜனதா மூத்த தலைவர்
தேசிய கட்சியை அழித்தவர் ராகுல்காந்தி
சித்தராமையா இந்த முறையும் நானே முதல்-மந்திரி ஆவேன் எனக் கூறி வருகிறார். கடந்த தேர்தலில் அவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். பாதாமியில் 1,700 வாக்குகளில் தான் வெற்றி பெற்றார். தேசிய கட்சியை அழித்த ராகுல்காந்தி இங்கு வந்து ஊழல் பற்றி பேசுகிறார் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் வெற்றி பெறாது. பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
- சீனிவாசபிரசாத், பா.ஜனதா எம்.பி.
மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்குவோம்
கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆட்சி அமைந்தால், மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்குவோம். மேலும் மாட்டிறைச்சி வியாபாரம் செய்ய உரிமம் வழங்கப்படும். பசுவதை தடை சட்டம் அமலில் இருப்பதால் வயதான மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டத்தை ரத்து செய்வோம். மாட்டிறைச்சி விற்பனைக்கு அனுமதி வழங்குவோம்.
- சி.எம்.இப்ராகிம், ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர்.