கோலார் தங்கவயலில் கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை


கோலார் தங்கவயலில்  கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:45 PM GMT)

கோலார் தங்கவயலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கோலார் தங்கவயல்

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணர் பிறந்த தினம் ஒவ்வொரு ஆண்டு கிருஷ்ண ெஜயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கர்நாடகத்தில் முழுவதும் ஒவ்வொரு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. குறிப்பாக கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளுடன் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இதற்காக மாநில முழுவதும் கோவில்களை விடியவிடிய திறந்து வைக்கும்படி இந்து சமைய அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது.

இதனால் பக்தர்கள் அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். இந்தநிலையில் கோலார் தங்கவயலில் நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளை வீடுகளிலும், கோவில்களிலும் படைத்து பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

கோவில்களில் சிறப்பு பூஜைகள்

இதற்காக கோலார் தங்கவயலில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில் அலங்கார தோரணம் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கோலார் தங்கவயல் ஓ.டேனியல் சாலையில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ணர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கீதா சாலையில் உள்ள பெருமாள் கோவில், தூய மரியன்னை பள்ளி அருகேயுள்ள கருமாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் கிருஷ்ணர் சிலை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

இதில் சாதி, மதம் பேதமின்றி அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு கிருஷ்ணனை வழிபட்டனர்.

வீடுகளிலும் அகல்விளக்குகளை வைத்து மக்கள் கிருஷ்ணரை வழிபட்டனர். மேலும் குழந்தைகளின் பாதங்களை மாவில் முக்கி எடுத்து, வாசல் முதல் வீடு முழுவதும் நடந்து வர வைத்தனர். இவ்வாறு செய்தால் கிருஷ்ணர் வீட்டுக்கு வாசம் செய்வார் என்பது ஐதீகம்.


Next Story