'இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன' - மத்திய மந்திரி பியூஷ் கோயல்


இந்தியாவின் வளர்ச்சியில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன - மத்திய மந்திரி பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 16 Jan 2024 8:18 PM GMT (Updated: 17 Jan 2024 6:46 AM GMT)

இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன் ஒவ்வொரு நபருக்கும் உள்ளது என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்-அப் விருதுகள் மற்றும் மாநில தரவரிசை விருதுகள் வழங்கும் விழாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான லட்சியப் பயணத்தில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் துறையில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையின் மீது குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டது.

புதிய யோசனைகளை செயல்படுத்தவும், புதுமைகளை நிகழ்த்தவும் வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன் ஒவ்வொரு நபருக்கும் உள்ளது. உலக அளவில் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவில் உள்ளது. எண்ணற்ற தொழில் முனைவோரின் கனவுகளை நனவாக்கி, வர்த்தகம் செய்வதற்கான புதுமையான வழிகளை இந்தியா உருவாக்கியுள்ளது.

வாழ்க்கையை எளிமையாக்கும் வகையிலும், தற்போதுள்ள வேலை முறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையிலும் புதுமையான யோசனைகளை ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்."

இவ்வாறு மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.


Next Story