கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது - இமாச்சல் முதல்-மந்திரி


கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது - இமாச்சல் முதல்-மந்திரி
x

கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக இமாச்சல் முதல்-மந்திரி தெரிவித்தார்.

சிம்லா,

இமாச்சலப் பிரதேசத்தில் கஞ்சா சாகுபடியை சட்டப்பூர்வமாக்குவது, அதன் மருத்துவ குணங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாடு ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க அம்மாநில அரசி முடிவு செய்துள்ளது. இதன்படி மாநிலத்தில் கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "இது பல மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதால், நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதை நிரூபிப்பதோடு, மாநிலத்திற்கு வருவாயை ஈட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். தொழில்துறை நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படும்.

மாநிலத்தில் கஞ்சா சாகுபடி தொடர்பான ஒவ்வொரு அம்சங்களையும் 5 எம்எல்ஏக்கள் கொண்ட குழு முழுமையாக ஆய்வு செய்யும். இக்குழுவினர் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடும் பகுதிகளை பார்வையிட்டு ஒரு மாதத்தில் அறிக்கை சமர்பிப்பார்கள். குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அரசு எந்த முடிவையும் எடுக்கும்.

கஞ்சா சாகுபடி பல மாநிலங்களில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு உத்தராகண்ட் அரசு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்கியது. குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும், உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களிலும் நிபந்தனைகளின் கீழ் கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரியா, உருகுவே, பெல்ஜியம், செக் குடியரசு போன்ற நாடுகளிலும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கஞ்சா சாகுபடி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக மாநில அரசு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளும்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story