பாஜக தலைவரின் கருத்துக்கு எதிராக நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் வன்முறை


பாஜக தலைவரின் கருத்துக்கு எதிராக நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் வன்முறை
x

Image Courtesy: PTI

பாஜக தலைவரின் கருத்துக்கு எதிராக நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஞானவாபி இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் இந்து மத கடவுள் சிவலிங்க சிலை உள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனை தொடர்ந்து, நுபுர் சர்மா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உத்தரபிரதேச மநிலம் கான்பூரில் உள்ள பரடி சவுக் மார்க்கெட் பகுதியில் நேற்று முழு அடைப்பிற்கு இஸ்லாமிய மத அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இந்த முழு அடைப்பிற்கு அப்பகுதியில் கடை வைத்திருந்த மற்ற தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இஸ்லாமிய மதத்தினர் நேற்று மதியம் மத வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு மார்க்கெட் பகுதிக்கு பேரணியாக சென்று கடைகளை மூடும்படி தெரிவித்தனர். இதற்கு சில கடை உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். அப்போது, பேரணி இரு தரப்பினருக்கு இடையேயான வன்முறையாக வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை கொண்டு தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.

இதனை தொடந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story