டெல்லியில் வினோத சம்பவம்; வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் ரூ.500 நோட்டை விட்டு சென்ற திருடர்கள்


டெல்லியில் வினோத சம்பவம்; வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் ரூ.500 நோட்டை விட்டு சென்ற திருடர்கள்
x

டெல்லியில் திருட சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் ரூ.500 நோட்டு ஒன்றை திருடர்கள் விட்டு சென்ற வினோத சம்பவம் நடந்து உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியின் ரோகிணி நகர் பகுதியில் 8-ம் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வருபவர் எம். ராமகிருஷ்ணன் (வயது 80). ஓய்வு பெற்ற என்ஜினீயர்.

இவர் தனது மனைவியுடன் குருகிராமில் உள்ள மகன் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். 2 நாட்கள் கழித்து, அவரது வீட்டருகே வசிப்பவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில், அவரது வீட்டில் திருடு போயுள்ளது என தொலைபேசியில் பேசியவர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். உடனடியாக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டின் நுழைவு வாசலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

வீட்டின் உள்ளே சென்றவர், எந்த பொருளும் திருடு போகவில்லை என அறிந்து கொண்டார். இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

ஆனால், வாசலுக்கு அருகே ரூ.500 நோட்டு ஒன்று கிடந்தது. வீட்டில் விலை மதிப்பிலான பொருட்கள் எதனையும் வைக்கவில்லை. அலமாரியும் உடைக்கப்படாமல் இருந்தது என தெரிவித்து உள்ளார்.

வீட்டில் கொள்ளையடிக்க எந்த பொருளும் கிடைக்காத விரக்தியில், திருட வந்தவர்கள் ரூ.500 நோட்டு ஒன்றை விட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story