கர்நாடகத்தில் மத பிரச்சினையை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 75 பிரபலங்கள் கடிதம்


கர்நாடகத்தில் மத பிரச்சினையை ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 75 பிரபலங்கள் கடிதம்
x

கர்நாடகத்தில் மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 75 பிரபலங்கள் பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர்.

பெங்களூரு:

முஸ்லிம் வியாபாரிகள்

கர்நாடகத்தில் சமீபத்தில் மத ரீதியான பிரச்சினைகள் எழுந்தன. அதாவது பள்ளி-கல்லூரிக்க்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லிம் மாணவிகளுக்கு அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சில இந்து அமைப்புகள் ஹலால் இறைச்சி வாங்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தது. மசூதிகள் மீது இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு கோரி போராட்டம் நடத்தியது.

கோவில்களின் அருகே முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்களை வாங்க வேண்டும் என்று சிலர் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். தார்வாரில் ஒரு முஸ்லிம் வியாபாரியின் தள்ளுவண்டி கடை அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக பல்வேறு உயர்ந்த பதவிகளை வகித்த முக்கிய பிரமுகர்கள், எழுத்தாளர்கள், அரசு துறையில் உயர் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்களான வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்லப்பரெட்டி, மாநில அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிரஞ்சீவ்சிங், ரகுநந்தன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அஜய்குமார் சிங், எழுத்தாளர்கள் சசி தேஷ்பாண்டே, வைதேகி, திரைப்பட இயக்குனர் கிரீஷ் காசரவள்ளி, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாஉள்பட 75 பேர் சேர்ந்து கூட்டாக கர்நாடக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

கவலை அளிக்கிறது

கர்நாடகத்தில் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்து பேச முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து கடிதம் வழங்க முயற்சி செய்தோம். ஆனால் முதல்-மந்திரியை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. அதனால் நாங்கள் இந்த கடிதத்தை பகிரங்கமாக எழுதியுள்ளோம். கர்நாடகத்தில் சமீபகாலமாக சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

இத்தகைய விஷயத்தில் கர்நாடகத்தின் அமைதி, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பன்முக தன்மையை அழிப்பதாக உள்ளது. கர்நாடகம் புதுமைகளை புகுத்துதல் மற்றும் புதிய விஷயங்களை உருவாக்குவதில் புகழ் பெற்று திகழ்கிறது. ஆனால் சமீப காலமாக சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், கர்நாடகத்தின் பெருமையை சீர்குலைப்பதாகவும் உள்ளது.

புறக்கணிக்கிறார்கள்

சாதி-மதத்தின் பெயரில் மக்களை தாக்குவது, வன்முறைகளை தூண்டிவிடுவது, வெறுப்பு கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துவது சரியல்ல. அரசியல் சாசன பதவியில் இருப்பவர்களே இவ்வாறான கருத்துகளை கூறுவது என்பது அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது. அவர்கள் வன்முறையை தூண்டுபவர்களை ஆதரிக்கிறார்கள். வெறுப்பு கருத்துக்களை, வன்முறையை அங்கீகரிக்கிறார்கள். சொத்துகளை கட்டாயமாக எடுத்து கொள்கிறார்கள்.

மேலும் அந்த சமூகங்களின் மக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக புறக்கணிக்கிறார்கள். அந்த மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஒரு தரப்பு மக்கள் பயமான சூழ்நிலையில் வாழும் நிலையில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

கடும் நடவடிக்கை

அதனால் முதல்-மந்திரி போலீஸ் துறைக்கு உத்தரவிட்டு, மத ரீதியான பிரச்சினைகளை தூண்டிவிடுபவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கும்படி கூற வேண்டும். சட்டத்தை நிலைநாட்டி அனைத்து தரப்பு மக்களையும் குறிப்பாக கீழ்நிலையில் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டும். மதக்

கலவரங்கள் நடந்தால் அதற்கு காரணமான உள்ளூர் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர்.


Next Story