குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் எச்சரிக்கை
சிவமொக்காவில் ரவுடிகள் அணிவகுப்பு நடந்தது. அப்போது போலீசார் ரவுடிகளிடம் குற்றச்செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் ரவுடிகள் அணிவகுப்பு நடந்தது. அப்போது போலீசார் ரவுடிகளிடம் குற்றச்செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ரவுடிகள் வீடுகளில் சோதனை
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் அதிகாரிகள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மேலும் பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து ஒவ்வொருவரையும் அழைத்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவமொக்கா நகரில் உள்ள பிரபல ரவுடிகள் குறித்த பட்டியலை போலீசார் தயார் செய்தனர்.
இதற்காக அதிகாலையிலேயே சிவமொக்காவில் உள்ள தொட்டபேட்டை, கோட்டை, வினோபாநகர், ஜெயநகர், துங்காநகர், கும்சி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போது பல ரவுடிகளை பிடித்தனர். அவர்களை சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து சென்ற போலீசார், அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார் ஒவ்வொரு ரவுடிகளையும் அழைத்து, அவர்களின் பெயர், விவரம் மற்றும் செய்து வரும் தொழில், இதுவரை செய்துள்ள குற்றங்கள், போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
குற்றச்செயல்களில் ஈடுபட கூடாது
இதையடுத்து அவர்களை எச்சரித்தார். அப்போது, வருகிற மே மாதத்தில் மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் முதல் தேர்தல் முடிந்து, முடிவுகள் வரும் வரை ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். யாரேனும் பொது மக்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு பக்கம் விளைவித்தால், அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ரவுடிகள் தங்கள் குற்றச்செயல்களை விட்டுவிட்டு, வேலையில் ஆர்வம் காட்டவேண்டும்.
இதையும் மீறி யாரேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தை விட்டு கடத்தப்படுவீர்கள் என்று கூறினர்.. அதற்கு ரவுடிகள் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட போவது இல்லை என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து பெயர், முகவரியை வாங்கிவிட்டு போலீசார், அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.