லஞ்சம் கொடுப்பதைத் தடுக்க கர்நாடக தேர்தல் களத்தை தீவிரமாக கண்காணியுங்கள் - தேர்தல் கமிஷன் உத்தரவு
லஞ்சம் கொடுப்பதைத் தடுக்க கர்நாடக தேர்தல் களத்தை தீவிரமாக கண்காணியுங்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
பேரம் பேசிய பா.ஜ.க. மந்திரி
224 இடங்களை கொண்டுள்ள கர்நாடக சட்டசபைக்கு வரும் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. இந்தத் தேர்தலில் மாநில வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை மந்திரி சோமண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன் சாமி என்ற ஆலூர் மல்லு போட்டியிடுகிறார். இவர் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றால் ரூ.50 லட்சம் பணம் தருவதுடன், அரசு வாகனமும் தருவதாக மந்திரி சோமண்ணா பேரம் பேசியதாக ஆடியோ வெளியாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சாம்ராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் மந்திரி சோமண்ணா மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 171 'இ' மற்றும் 171 'எப்' ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன் உத்தரவு
இந்த நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் அதிரடியாக ஒரு உத்தரவு போட்டுள்ளது.
அந்த உத்தரவில், "மாநிலத்தில், தேர்தல் கள நிலைமையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கவோ அல்லது மிரட்டும் முயற்சிகளுக்கோ எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மாநில தேர்தல் எந்திரம், எல்லா வகையான ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.