போலீஸ் போர்வையில் உலா... பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்
சஞ்சய் ராயின் டி-சர்ட், பைக் ஆகியவற்றில் கொல்கத்தா போலீஸ் என எழுதியிருக்கும். அவர் போலீஸ் என்றே தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த பெண் டாக்டரின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் ராய் வைக்கப்பட்டு உள்ளார்.
அவர் மருத்துவமனையின் ஊழியர் கிடையாது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் பல பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். கொல்கத்தா போலீசில் ஒப்பந்த பணியாளராக அவர் இருந்து வந்துள்ளார். ரூ.12 ஆயிரம் சம்பளம் பெறும் அவருக்கு போலீசாருக்கான மற்ற சலுகைகள் எதுவும் இல்லை.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பறிக்கும் கும்பலில் ஒருவராக செயல்பட்டு வந்துள்ளார். படுக்கை வசதி இல்லையெனில், அருகேயுள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளை பெற்று தருவதற்கு நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பெற்று கொள்வார்.
அவர் காவலர் இல்லை என்றபோதும், டி-சர்ட், பைக் ஆகியவற்றில் கொல்கத்தா போலீஸ் என எழுதியிருக்கும். அவர் போலீஸ் என்றே தன்னை அறிமுகப்படுத்தி கொள்வார். பலரும் அவரை போலீஸ் என்றே நினைத்திருக்கின்றனர்.
போலீசார் ராயை கைது செய்தபோது, அவர் விரைவில் உண்மையை ஒப்பு கொண்டு விட்டார். ராய்க்கு எந்தவித வருத்தமும் இல்லை. நீங்கள் விரும்பினால் என்னை தூக்கில் போடுங்கள் என போலீசாரிடம் கூறியிருக்கிறார். அவருடைய மொபைல் போன் முழுவதும் ஆபாச படங்கள் இருந்துள்ளன.
சி.சி.டி.வி. காட்சியில் வெள்ளியன்று அதிகாலை 4 மணியளவில், அவசரகால கட்டிடத்திற்குள் அவர் நுழையும் காட்சிகள் உள்ளன. சில மணிநேரங்களுக்கு பின்னர் அதே கட்டிடத்தில் பெண் டாக்டரில் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதில், டாக்டரின் உடல் அருகே புளூடூத் ஹெட்செட் ஒன்று கிடந்துள்ளது.
ராய் வரும்போது, அவருடைய கழுத்தில் அந்த ஹெட்செட் இருந்துள்ளது. அவர் வெளியே செல்லும்போது, கழுத்தில் அது இல்லை. டாக்டர் உடலருகே இருந்த புளூடூத் ஹெட்செட், ராயின் போனுடன் ஒத்து போனது.
சம்பவத்திற்கு பின்னர், ராய் வீட்டுக்கு சென்று உடைகளை துவைத்து விட்டு, தடயங்களை அழித்திருக்கிறார். எனினும் காலணிகளில் இருந்த ரத்த கறை அவரை கைது செய்ய வைத்துள்ளது.