இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விண்வெளித்துறையில் வலுவான தொடர்பு- பெங்களூரு மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்து
விண்வெளித்துறையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பெங்களூருவில் நடந்த விண்வெளி மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
பெங்களூரு: விண்வெளித்துறையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பெங்களூருவில் நடந்த விண்வெளி மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ககன்யான் திட்டம்
இந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) பெங்களூருவில் அமைந்துள்ளது. அந்த மையத்தின் தலைவராக சோம்நாத் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் விண்வெளி மைய தலைவர் என்ரிகோ பலேமர், இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் மார்ட்டின் வன்டென் பெர்க் ஆகியோர் இஸ்ரோ மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். அங்கு அதன் தலைவர் சோம்நாத்தை சந்தித்து உரையாடினர். விண்வெளித்துறையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவின் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக கோகோசில் தற்காலிக தரை கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து அவர்கள் ஆலோசித்தனர். மேலும் செயற்கைகோள் புள்ளி விவரங்களை பயன்படுத்தி புவி கண்காணிப்பு, செயற்கைகோள், விண்வெளி குறித்த விழிப்புணர்வு, வானிலை மற்றும் காலநிலை ஆய்வுகள் மேற்கொள்வதில் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
நீர் நிர்வாகம்
அதே போல் டச்சு நாட்டின் தூதரும் சோம்நாத்தை சந்தித்து பேசினார். அவர்களும் செயற்கைகோள், காற்று மாசு, நீர் நிர்வாகம், விண்வெளி சாா்ந்த வான்சாஸ்திரம் உள்ளிட்ட விஷயங்களில் இணைந்து செயல்படுவது குறித்து விவாதித்தனர். மேலும் இந்திய, டச்சு தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையே கலந்துரையாடலை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து நாட்டின் தூதர்கள், 7-வது பெங்களூரு விண்வெளி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர். இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் விண்வெளித்துறையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதே நோக்கத்திற்காக இரு நாடுகளின் 6 விண்வெளி நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
செயற்கைகோள்கள்
இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், 'ஆஸ்திரேலியா சில புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. மேலும் சில நேரங்களில் இந்திய செயற்கைகோள்களை ஏவவும் ஆஸ்திரேலியா தயாராக உள்ளது' என்றார்.
அந்த ஆஸ்திரேலியா குழுவினர் ககன்யான் திட்ட மையம் மற்றும் செயற்கைகோள் ஒருங்கிணைப்பு மையத்தையும் பார்வையிட்டனர்.