ஹிஜாப் விவகாரத்தில் போராட்டம்; இடைநீக்கம் செய்யப்பட்ட 6 மாணவிகள் கல்லூரிக்கு வர அனுமதி
ஹிஜாப் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 6 மாணவிகள் கல்லூரிக்கு வர அனுமதி வழங்கப்பட்டது.
மங்களூரு;
காவி துண்டு
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் கடந்த பிப்ரவரி மாதம் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தினர். மேலும், ஹிஜாப் அணிய தடைவிதித்தனர். இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிகள் முன்பு போராட்டங்களை நடத்தினர்.
அவர்களுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, ஹிஜாப் குறித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது செல்லும் என கூறினார்.
வகுப்புகள் புறக்கணிப்பு
இதற்கிடையே கல்லூரி தேர்வுகள் நடைபெற்று விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் மங்களூருவில் உள்ள கல்லூரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய கல்லூரி நிர்வாகம் ஐகோர்ட்டின் உத்தரவை குறிப்பிட்டு, ஹிஜாப்பை கழற்றுமாறு கூறியது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த முஸ்லிம் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வீடுகளுக்கு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்கதையாக நடத்து வந்தது. மேலும், சில முஸ்லிம் மாணவிகள் மாவட்ட கலெக்டர் ராஜேந்திராவை சந்தித்து தங்களை ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினர். ஆனால் கலெக்டர் அதற்கு மறுத்து, அரசின் உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இடைநீக்கம்
மேலும், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வகுப்புகளுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் புத்தூர் தாலுகா உப்பினங்கடி பகுதியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹிஜாப் அணிந்து வகுப்பு செல்ல அனுமதி மறுக்கப்பட்டால் கல்லூரி முன்பு முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியதாக கல்லூரி நிர்வாகம் 6 முஸ்லிம் மாணவிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இடைநீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் மாணவிகள் 6 பேரும் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் ஹிஜாப் தொடர்பான நாங்கள் போராட்டம் நடத்த மாட்டோம். எனவே எங்களை கல்லூரிக்குள் அனுமதிக்குமாறு கேட்டு கொண்டனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று இடைநீக்கம் செய்யப்பட்ட 6 முஸ்லிம் மாணவிகளும் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புகளுக்கு வந்தனர்.