மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ. கட்சி தாவல் எதிரொலி: காங்கிரஸ்-மம்தா கட்சி மோதல்


மேற்கு வங்காளத்தில் எம்.எல்.ஏ. கட்சி தாவல் எதிரொலி: காங்கிரஸ்-மம்தா கட்சி மோதல்
x

கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சி தாவியது தொடர்பாக காங்கிரசுக்கும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலத்தில் 3 மாதங்களுக்கு முன்பு, சாகர்டிகி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில், யாரும் எதிர்பாராதவகையில், ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பா.ஜனதா ஆகியவற்றை வீழ்த்தி, காங்கிரஸ் வேட்பாளர் பேரான் பிஸ்வாஸ் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்காள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வாக திகழ்ந்தார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனுமான அபிஷேக் பானர்ஜி முன்னிலையில், பேரான் பிஸ்வாஸ், திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார்.

காங்கிரஸ் தாக்குதல்

இதற்கு காங்கிரஸ் கட்சி நேற்று ஆட்சேபனை தெரிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற 3 மாதங்களுக்குள் பேரான் பிஸ்வாசை திரிணாமுல் காங்கிரஸ் மயக்கி இழுத்து விட்டது. இது, அந்த தொகுதி மக்கள் அளித்த தீர்ப்புக்கு முற்றிலும் துரோகம் செய்வது ஆகும்.

இதுபோன்ற இழுப்புவேலைகள், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு வலிமை சேர்க்காது. பா.ஜனதாவின் நோக்கங்களுக்குத்தான் பயன்படும் என்று அவர் கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி

அவருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்த பிறகும், மேற்கு வங்காளத்தில் அவரை எதிர்க்க உறுதி பூண்டிருப்பதாக 2 வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது. எனவே, காங்கிரஸ் தான், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு நம்பிக்கை துரோகம் செய்தது.

அப்படி செய்து விட்டு, எங்களிடம் பூங்கொத்துகளை எதிர்பார்க்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணி நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரசுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story