"நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது- ப.சிதம்பரம் எதிர்ப்பு
நிதிஷ்குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாது என்பது எனது தனிப்பட்டக் கருத்து என்று ப.சிதம்பரம் கூறினார்.
ஜெய்பூர்,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் அம்மாநில சட்டசபையில், பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசினார். தாம்பத்திய உறவில் கணவன்மார்களின் செயல்களால்தான் குழந்தை பிறப்பு அதிகரிக்கிறது. படித்த பெண்ணாக இருந்தால், கணவனை எப்படி கட்டுப்படுத்துவது என்று அவருக்கு தெரியும். தற்போது, படித்த பெண்கள் அதிகரித்து வருவதால், குழந்தை பிறப்பு குறைந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நிதிஷ்குமாரின் பேச்சு, பெண்களை இழிவுபடுத்துவது போல் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிர்க்கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில், நேற்று பீகார் சட்டசபைக்கு வந்த நிதிஷ்குமார், சட்டசபைக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெண்களை பற்றிய தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நிதிஷ் குமாரின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நிதிஷ் குமார் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. தனது அந்த பேச்சுக்காக சட்டமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்பது எனது தனிப்பட்டக் கருத்து" என்று கூறியுள்ளார்.