அருணாசல பிரதேசத்தில் திடீர் தீ விபத்து; 700 கடைகள் எரிந்து சேதம்


அருணாசல பிரதேசத்தில் திடீர் தீ விபத்து; 700 கடைகள் எரிந்து சேதம்
x

அருணாசல பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 700-க்கும் கூடுதலான கடைகள் எரிந்து சேதம் அடைந்து உள்ளன.



இடாநகர்,


அருணாசல பிரதேசத்தில் இடாநகரில் நகர்லாகன் பகுதியில் பழமையான சந்தை ஒன்று உள்ளது. இதில், பல நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை சூடு பிடித்தது.

இந்த நிலையில், திடீரென கடையொன்றில் இன்று அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இதன்பின்னர், அருகே இருந்த கடை மீதும் தீப்பற்றி கொண்டது. இந்த தீ அடுத்தடுத்து பரவி, 700 கடைகளுக்கும் கூடுதலாக எரிந்து சாம்பலானது.

முதலில் 2 மணிநேரம் வரை 2 கடைகளிலேயே தீப்பிடித்து, எரிந்து உள்ளது. இந்த பகுதியானது தலைநகர் இடாநகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. காவல் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் அருகேயே உள்ளன.

எனினும், இதனை அணைக்க யாரும் வரவில்லை. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்ததிலோ அல்லது விளக்குகள் ஏற்றியதில் இருந்தோ தீப்பற்றி பரவி இருக்க கூடும் என கூறப்படுகிறது. கடைகள் மூங்கில் மற்றும் மரங்களை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.

அந்த சந்தையில் நிறைய சரக்குகளும் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், தீ எளிதில் பரவியுள்ளது. இந்த நிலையில், சதி செயலா என்ற வகையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியாஸ் சிலிண்டரும் வெடித்ததில், தீ மளமளவென பரவியுள்ளது. இதனால், கடை உரிமையாளர்கள் பயந்து போய் தீயை அணைக்க முன்வரவில்லை. இதனால், கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து போயிருக்க கூடும் என கூறப்படுகிறது.


Next Story