பெங்களூருவில் திடீர் மழை


பெங்களூருவில் திடீர் மழை
x

பெங்களூருவில் திடீரென மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரு:

நீரில் மூழ்கி பாதிப்பு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துவிட்டது. இந்த பருவமழையின்போது கர்நாடகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. தலைநகர் பெங்களூருவிலும் கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கின. கடைசியாக கடந்த செப்டம்பர் 4-ந் தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. அதனால் நகரில் பல பகுதிகளில் நீரில் மூழ்கி பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. பெரும் செல்வந்தர்கள், பெரிய நிறுவனங்களின் அதிகாரிகளின் வீடுகளும் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பவில்லை.

அதன் பிறகு பெங்களூருவில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மழை பெய்யவில்லை. தூறல் போடுவதும், லேசாக அதாவது பூமி நனையும் அளவுக்கும் சாரல் மழை பெய்வதுமாக இருந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம், கர்நாடகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தது.

பெருக்கெடுத்து ஓடியது

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. அவ்வப்போது வாகனத்தில் கருமேகங்கள் சேர்ந்து மழை பெய்வது போல் காட்சியளித்தது. மாலை 6 மணியளவில் நகரில் மழை பெய்யத்தொடங்கியது. மெஜஸ்டிக், சாந்திநகர், பொம்மனஹள்ளி, விதான சவுதா, எம்.ஜி.ரோடு, வில்சன்கார்டன், ஜெயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்த மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பெங்களூருவில் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளதால், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story