மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வயதான தம்பதி தற்கொலை
பக்கவாத நோயால் பாதித்த மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
சிவமொக்கா:
பக்கவாத நோயால் பாதித்த மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
பக்கவாதம்
சிவமொக்கா டவுன் மிளகட்டா ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பரந்தையா (வயது 70). தொழிலாளி. இவரது மனைவி தானம்மா (61). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் சிறுவயதில் மஞ்சுநாத் (25) என்ற வாலிபரை ஆசிரமத்தில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வந்தனர். அவருக்கு பிறவியிலேயே பக்கவாதம் ஏற்பட்டு இருந்தது.
குடும்ப வறுமை காரணமாக அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையே கூலி வேலை செய்து வந்த 2 பேரும், சம்பாதிக்கும் பணத்தில் நோய்வாய்ப்பட்ட மகனை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் வயதான தம்பதி லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்தனர்.
விஷம் குடித்து
கடனை திருப்பி செலுத்துமாறு, கடன் கொடுத்தவர்கள், அவர்ளுக்கு தொல்லை செய்தனர். இதனால் அவர்கள் மனமுடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வயதான தம்பதி, பக்கவாதம் பாதித்த மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மறுநாள் காலையில் அவர்களது வீட்டின் கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தம்பதி மற்றும் அவர்களது மகன் பிணமாக கிடந்தனர்.
கடன் தொல்லை
இதையடுத்து அவர்களது உடல்களை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தம்பதிக்கு மகன் இல்லாத நிலையில் தத்தெடுப்பு முறையில் மஞ்சுநாத்தை எடுத்து வளர்த்து வந்தது தெரிந்தது.
அதனால் அவருக்கு ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதும் தெரிந்தது. கடனை செலுத்த முடியாமல் மனமுடைந்த தம்பதி, மகனுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.