கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன பெண் மேலாளர் தற்கொலை
பெங்களூருவில் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன பெண் மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தனியார் நிறுவன பெண் மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தனியார் நிறுவன மேலாளர்
டெல்லியை சேர்ந்தவர் அபர்ணா குமாரி (வயது 41). இவர், பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். எஸ்.ஜே.பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் யுனிட்டி கட்டிடத்தில் அபர்ணா வேலை செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் அவர் வழக்கம் போல் வேலைக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், மாலை 6.45 மணியளவில் கட்டிடத்தின் 4-வது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக திடீரென்று அபர்ணா குதித்தார். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர், ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று அபர்ணா உடலை கைப்பற்றியும் விசாரித்தனர்.
ஊழியரின் கையை தட்டிவிட்டு...
விசாரணையில், அபர்ணா டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு அபர்ணா பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். இதன்காரணமாக மனமுடைந்த அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தில் இருந்த அபர்ணாவின் செல்போன் மற்றும் டைரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கே வேலை முடிந்து அனைவரும் நிறுவனத்தில் இருந்து புறப்பட்டு சென்றிருந்தனர். ஆனால் அபர்ணா வீட்டுக்கு செல்லாமல் நிறுவனத்திலேயே இருந்திருக்கிறார். 6.45 மணியளவில் ஜன்னல் வழியாக அவர் குதிக்க முயன்றதை பார்த்த தொழிலாளி, அபர்ணாவை பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கையை தட்டிவிட்டு விட்டு அபர்ணா கீழே குதித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து எஸ்.ஜே.பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.