திருமணத்திற்கு மாணவி மறுத்ததால் லாரியில் இருந்து குதித்து கிளீனர் தற்கொலை
குடிபண்டே அருகே திருமணத்திற்கு 10-ம் வகுப்பு மாணவி மறுத்ததால் லாரியில் இருந்து குதித்து கிளீனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கோலார் தங்கவயல்:
குடிபண்டே அருகே திருமணத்திற்கு 10-ம் வகுப்பு மாணவி மறுத்ததால் லாரியில் இருந்து குதித்து கிளீனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கல்லூரி மாணவர்
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா பீச்சகானஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர்(வயது 17). இவரது தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் தனது தாய் லட்சுமம்மாவுடன் வசித்து வந்தார். மனோகர் குடிபண்டே டவுனில் உள்ள பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை மனோகர் காதலித்து வந்தார். ஆனால் மனோகரின் காதலை அந்த மாணவி ஏற்கவில்லை. அவர் காதலை ஏற்க மறுத்து வந்தார்.
தற்கொலை
இதையடுத்து கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்த மனோகர், லாரி கிளீனராக வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மனோகர் மாணவியை கட்டாயப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தான் 10-வது படிப்பதாகவும், தனக்கு 16 வயதே ஆவதாகவும், அதனால் தற்போது திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் மாணவி கூறி உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோகர் நேற்று முன்தினம் தான் வேலை பார்த்த லாரியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
லாரியில் இருந்து கீழே குதித்த மனோகர் மீது சக்கரம் ஏறியதால் அவரது உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி குடிபண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.