மராட்டிய முதல்-மந்திரி மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டம்; அதிர்ச்சி தகவல்
மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மராட்டியத்தில் தசரா பேரணி நடத்தப்பட உள்ள சூழலில், ஆளும் அரசில் முதல்-மந்திரியாக உள்ள ஏக்நாத் ஷிண்டே மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்படும் என கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
இந்த அச்சுறுத்தல் பற்றி மராட்டிய உளவு துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்து, மும்பையில் உள்ள முதல்-மந்திரியின் வர்ஷா பங்களா மற்றும் தானேவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஷிண்டே கூறும்போது, இதற்கு முன்பு மந்திரியாக இருந்தபோதும், நக்சலைட்டுகள் மற்றும் தேச விரோத சக்திகளிடம் இருந்து இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன.
கடந்த காலங்களில் மற்றும் தற்போது வந்துள்ள இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை. வருங்காலங்களிலும் இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் பயப்படமாட்டேன் என கூறியுள்ளார். உள்துறை மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து வருகின்றனர் என கூறியுள்ளார். உள்துறை மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியான தேவேந்திர பட்னாவிஸ் சட்டம் மற்றும் ஒழுங்கை முழுவதும் கையாளும் திறன் படைத்தவர். யாரேனும், இதுபோன்ற மிரட்டலுக்கான ஏதேனும் முயற்சி எடுத்தால் அது வெற்றி பெறாது என ஷிண்டே கூறியுள்ளார்.