மூன்றாம் பாலின நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான கொள்கையை உருவாக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மூன்றாம் பாலினத்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான கொள்கையை உருவாக்கும்படி மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு இன்று கேட்டு கொண்டுள்ளது.
புதுடெல்லி,
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில், மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக தனக்கு விமான பணியாளருக்கான வேலை மறுக்கப்பட்டது என கூறி, ஷானவி பொன்னுசாமி என்ற திருநங்கை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இதனை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்து கொண்டது. இதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவதற்காக அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து ஆலோசிக்கும்படி மத்திய அரசை நீதிபதிகள் கேட்டு கொண்டனர்.
ஒவ்வொரு நிறுவனமும் சட்ட பிரிவுகளின் கீழ் செயல்பட வேண்டியது அவசியம் என கோர்ட்டு தெரிவித்து உள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களின் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ன்படி அனைத்து நிறுவனங்களிலும் அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு வழங்குவதற்கான கொள்கையை உருவாக்கும்படி மத்திய அரசை சுப்ரீம் கோர்ட்டு இன்று கேட்டு கொண்டுள்ளது.