11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான பில்கிஸ்பானு மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான பில்கிஸ்பானு மறுஆய்வு மனு தள்ளுபடி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

குஜராத்தில் 11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான பில்கிஸ்பானுவின் மறுஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பில்கிஸ்பானு கூட்டு பலாத்காரம்

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெரும் கலவரங்கள் மூண்டன. இந்த கலவரங்களின்போது ஏறத்தாழ ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அப்போது அங்கு பில்கிஸ்பானு என்ற 21 வயதான பெண், 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அத்துடன் அவரது கண் முன்பாக அவரது 3 வயது மகள் உள்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.

11 பேருக்குஆயுள் தண்டனை

இது தொடர்பான வழக்கை மும்பை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரித்தது.

விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதிய கோர்ட்டு, குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து 2008-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பு பின்னர் மும்பை ஐகோர்ட்டாலும், சுப்ரீம் கோர்ட்டாலும் உறுதி செய்யப்பட்டது.

11 பேரும் விடுதலை

தண்டனை அனுபவித்து வந்த 11 பேரும், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டை நாடினார்கள். அவர்கள் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அதை குஜராத் மாநில அரசு பரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து, சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி குஜராத் மாநில அரசு விடுவித்துவிட்டது. இது நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பில்கிஸ்பானு மறுஆய்வு மனு

11 பேர் விடுதலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு பில்கிஸ்பானு மனு தாக்கல் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டு நடைமுறைப்படி, மறுஆய்வு மனுக்கள் திறந்த கோர்ட்டில் பரிசீலிக்கப்பபடாமல், நீதிபதிகளின் அறையில்தான் பரிசீலிக்கப்படும்.

அந்த வழக்கப்படியே பில்கிஸ்பானுவின் மனு கடந்த 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் முன் நீதிபதிகள் அறையில் பரிசீலிக்கப்பட்டது.

தள்ளுபடி

அதைத் தொடர்ந்து பில்கிஸ்பானுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த விவரத்தை பில்கிஸ் பானுவின்வக்கீல் சோபா குப்தாவுக்கு சுப்ரீம் கோர்ட்டின் உதவிப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை; அந்த உத்தரவின் முழுவிவரத்தைப் பார்த்து, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என சோபா குப்தா தெரிவித்துள்ளார்.


Next Story