முதுநிலை 'நீட்' தேர்வை தள்ளிவைத்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு


முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைத்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
x

கோப்புப்படம்

முதுநிலை ‘நீட்’ தேர்வை தள்ளிவைத்து உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கை பெறுவதற்கான 'நீட்' முதுநிலை தேர்வு வருகிற மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை 'நீட்' தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், 'நீட்' தேர்வுக்கு தயாராவதற்கு தங்களுக்கு போதுமான நேரம் இல்லை. தங்களுக்கான ஓராண்டு கால மருத்துவப் பயிற்சிக்கான 'கட்-ஆப்' தேதி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 'நீட்' தேர்வை சில வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

நீதிபதிகள் எஸ்.ஆர்.பட், தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.

அப்போது தேசிய தேர்வு வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, 'நீட்' தேர்வை நடத்தும் மாற்று தேதிக்கு வேறு வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், விவேக் தங்கா ஆகியோர், 'நீட்' தேர்வை தள்ளிவைத்து, அதற்கான கவுன்சிலிங்கை ஆகஸ்டு 11-ந் தேதிக்குப் பிறகு நடத்தினால் மருத்துவ மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என வாதிட்டனர்.

'ஒரு மாணவர் 'நீட்' தேர்வை திரும்பவும் எழுதுவதை உலகத்தில் எதுவும் தடுக்க முடியாது. சரியோ, தவறோ, இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க முடியாது' என்று கூறி தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story