இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி,
இலவச திட்டங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷர் மேத்தா, தேர்தலுக்கு முன்பு இலவசங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடை செய்ய மத்திய அரசு ஆதரவளிக்கும் என்றார். இலவசங்கள் விரைவில் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தியா பொருளாதார பேரழிவை சந்திக்கும் என்றார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி , இது மிகவும் முக்கியமான விவகாரம். ஒட்டுமொத்த மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் விவகாரம். இலவசங்களை நிறுத்த எந்த அரசியல் கட்சிகளும் நினைக்கவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இலவசங்கள் தொடரவேண்டும்.
இந்த விவகாரத்தில் நீண்ட விவாதம் நடத்த நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி, மத்திய நிதி ஆணையம், நிதி ஆயோக், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படவேண்டும்.
இந்த குழு, தேர்தலில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள், அவற்றை ஒழுங்குமுறை படுத்துவற்கான யோசனைகளை மத்திய அரசு, தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோட்டிற்கு அளிக்க வேண்டும்' என்றார்
இந்த விவகாரத்தில் குழு அமைப்பது அதன் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு, தேர்தல் ஆணையம், மாநிலங்களவை எம்.பி. கபில் சிபில் மற்றும் மனுதாரர் தங்கள் யோசனைகளை அடுத்த 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட தலைமை நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.