கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றியை ரத்து செய்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றியை ரத்து செய்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி,
கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராஜா. கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனித்தொகுதியில் போட்டியிட்டதாகவும், அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, போலியான சான்றிதழை தாக்கல் செய்து தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என கடந்த மார்ச் 20-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்டடின் தீர்ப்புக்கு அடுத்த விசாரணை தேதி வரை இடைக்கால தடை விதித்ததுடன், சட்டமன்ற நிகழ்வுகளில் மனுதாரர் ராஜா பங்கேற்க உரிமை படைத்தவர் என்றும், அதேசமயம் தீர்மானத்தின் மீது நடைபெறும் வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்படும் செலவுத்தொகை அல்லது பணப்பலன்களை பெற உரிமை இல்லை என்ற நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.