எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி


எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் ரத்து - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி
x

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18-ந்தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பி, முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வுக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்திருந்தனர். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மீதி நாட்கள் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்ற பிரச்சினைகளை எழுப்பினர். இதனையடுத்து சபையில் பதாகைகளை காண்பித்ததாகவும், துணைத் தலைவர் எச்சரிக்கையை மீறி சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக மாநிலங்களவையில் இருந்து 20 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதன்படி,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 பேர், தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த தலா ஒருவர் என 20 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்:- " எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால், மீண்டும் அவையின் உள்ளே பதாகைகளை கொண்டு வரமாட்டார்கள் என்று உறுதியளித்தால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு சபாநாயகரால் திரும்பப் பெறப்படும்"

மேலும், "விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று நாங்கள் கூறி வருகிறோம், இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தனது அலுவலகத்தை மீண்டும் பணியை தொடங்கி உள்ளார். எதிர்க்கட்சிகள் விரும்பினால் இன்றிலிருந்தே விவாதத்தை தொடங்கலாம்" என அவர் தெரிவித்தார்.


Next Story