நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கும் செல்லும் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு - கோர்ட்டு
குற்றவாளிகளை அரசியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு கோர்ட்டு அறிவுரை வழங்கியுள்ளது.
லக்னோ,
இளம் பெண் உள்பட 2 பேரை தற்கொலைக்கு தூண்டியதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அதுல் குமார் சிங் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அதுல் தாக்கல் செய்த மனு அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, எம்.பி. அதுல் குமார் மீது மொத்தம் 23 வழக்குகள் இருப்பதை மேற்கோள்காட்டிய கோர்ட்டு எம்.பி. அதுலுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி தினேஷ் குமார் சிங், 2004-ம் ஆண்டு மக்களவை எம்.பி.க்கள் மீது 24 சதவீத குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அது 2009-ம் ஆண்டு தேர்தலின் போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2014-ம் ஆண்டு அது 34 சதவீதமாக அதிகரித்தது. 2019-ம் ஆ ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களில் 43 சதவீகிதம் பேர் மீது குற்றவியல் நிலுவையில் உள்ளது. குற்றவாளிகளுக்கும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் இடையேயான புனிதமற்ற தொடர்பை துண்டிக்கவேண்டும். அரசியலில் இருந்து குற்றவாளிகளை நீக்க தேவையான நடவடிக்கையை தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றமும் மேற்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் செல்லும் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு அனைவருக்குமான எச்சரிக்கை மணி' என கோர்ட்டு தெரிவித்துள்ளது.