ராகுல்காந்தியின் டி-சர்ட் குறித்து பேசுவதுபா.ஜனதாவின் அறிவின்மையை காட்டுகிறது-காங்கிரஸ்
ராகுல்காந்தியின் டி-சர்ட் குறித்து பேசுவது பா.ஜனதாவின் அறிவின்மையை காட்டுவதாக நானா படோலே கூறியுள்ளார்.
மும்பை,
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி உள்ளார். இந்தநிலையில் யாத்திரையின் போது ராகுல் காந்தி அணிந்து இருந்த பர்பெர்ரி டி-சர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பா.ஜனதா சமூகவலைதளத்தில் விமர்சித்து இருந்தது.
இந்தநிலையில் பா.ஜனதாவின் இந்த விமர்சனம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது:- ராகுல் காந்தியின் டி-சர்ட் பற்றி பேசியது, பா.ஜனதாவின் அறிவின்மையை காட்டுகிறது. அப்போது ரூ.1½ லட்சத்துக்கு கண்ணாடியும், ரூ.10 லட்சத்துக்கு ஆடை அணியும் மோடி பற்றி என்ன சொல்வீர்கள்?.
நாட்டின் ஒருபாட்டையும், இறையாண்மையும் பலப்படுத்தவே பாரத் ஜோடா யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் முடிந்துவிட்டது, ராகுல் காந்தி முக்கியமில்லை என கூறி வந்த பா.ஜனதா தலைவர்கள், செய்தி தொடர்பாளர்கள், மந்திரிகள் தற்போது 24 மணி நேரமும் அவரை விமர்சித்து, களங்கப்படுத்தி வருகிறார்கள். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு ராகுல் காந்தி நேரடியாக மத்திய அரசிடம் பதில் கேட்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.